கும்பகோணம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது…
கும்பகோணம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இது பற்றி மாநகர நல அலுவலர் மருத்துவர் தி.திவ்யா கூறியதாவது :: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில் டெங்கு தடுப்பு களப்பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
டெங்கு பரப்பும்
ஏடிஸ் கொசு உற்பத்தியாவதை தடுக்க நகர் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள்,கடைகள்,பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது.கூட்டு துப்புரவு பணி மேற்கொண்டு பிளாஸ்டிக் கப்புகள்,தேங்காய் சிரட்டைகள்,டயர்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் கொசு புழு கண்டறிந்து அழிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் கொசுப்புழு உற்பத்தியாகாமல் இருப்பதனை ஆய்வு செய்து உறுதிப்படுத்துவதற்காக டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிமெண்ட் தொட்டி,ட்ரம்,பக்கெட் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தி ஆகாத வண்ணம் உள்ளதை உறுதிப்படுத்தினர். வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள் சிமெண்ட் தொட்டிகள்,டிரம் ஆகியவற்றில் கொசு புகாத வண்ணம் மூடி வைத்து வாரம் ஒரு முறை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துமாறு டெங்கு களப்பணியாளர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.மேலும் கடைகள் மற்றும் நீண்ட நாட்களாக பூட்டியிருக்கும் வீடுகள் காலி மனைகள் ஆகியவற்றில் டெங்கு கொசு உற்பத்தி ஆகும்
கலன்கள் கண்டறியப்பட்டால் உரிமையாளருக்கு பொது சுகாதாரச் சட்டம் 1939 இன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை டெங்கு தடுப்பு பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமான இடங்களில் (HOT SPOT) கண்டறியப்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதும் இருந்தால் அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.மேலும் நகர் பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் வாரந்தோறும் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.,மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள்( திங்கள், புதன்,வெள்ளி) நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டும் வருகிறது.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை தொடர்ந்து VEHICLE MOUNTED FOGGING MACHINE மூலம் 03-01-2025 தேதியில் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் புகை மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்கள் கூடும் இடங்களில் வாரம் இருமுறையும் மேலும் மாநகராட்சி முழுவதும் 48 வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்க அட்டவணை தயார் செய்து கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது..இனிவரும் காலங்களில் மேற்கண்ட ஆய்வு தொடரும் என்பதையும் மீறும் கடைகளுக்கான அபராத தொகை அதிகரிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும்,இந்த அறிவிப்பு மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்று கும்பகோணம் மாநகர் மருத்துவர்
தி.திவ்யா தெரிவித்துள்ளார்…