இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் பதவியேற்க உள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவரான கேரளாவை சேர்ந்த சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன் வரும் 14 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராக பதவியில் இருப்பார்.
இஸ்ரோவின் தலைவராக மீண்டும் ஒரு தமிழர்
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே. சிவன் பதவி வகித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக சிவன் பதவி வகித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராக உள்ளார். இஸ்ரோவில் சுமார் 40 ஆண்டு காலம் பணியாற்றியுள்ள வி. நாராயணன் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ராக்கெட் மற்றும் விண்கல உந்துதல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் வி நாராயணன்.
ஐஐடியில் படித்தவர்
காரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்த்த வி.நாராயனன் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஐஐடி காரக்பூரில் எம்.டெக் படித்த போது சிறந்த மாணவராக விளங்கினார். முதல் ரேங்குடன் சில்வர் மெடலும் பெற்றுள்ளார். ஆஸ்ட்ரோனேட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோல்டு மெடலும் பெற்றுள்ளார். இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக விருதுகளை பெற்றுள்ளார்.
கவுரவ டாக்டர் பட்டம்
சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். இஸ்ரோவின் ஜிஎஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் திட்டத்திற்கு CE20 கிரையோஜினிக் என்ஜின் உருவாக்குவதில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரோவின் கனவு திட்டங்க்களில் ஒன்றான ஆதித்யா விண்கலம், மற்றும் ஜி.எஸ்.எல்.வி எம்.கே III ராக்கெட் திட்டங்களிலும் இவர் மிக முக்கிய பங்காற்றியுள்ளார்.
இஸ்ரோவின் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய திட்டங்களிலும் முக்கிய பங்காற்றினார். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் வரும் 2026 ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே தற்போது இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் வி.நாராயணனுக்கு அடுத்தடுத்து பல முக்கிய சவால்கள் உள்ளன.