போலி பத்திரப்பதிவு புகாரில் காவல்துறை மீது நடவடிக்கை கோரிய மனுவுக்கு உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு…!
போலி பத்திரப்பதிவு புகாரில் காவல்துறை மீது நடவடிக்கை கோரிய மனுவுக்கு உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு…!
மதுரையில் நடைபெற்ற போலி பத்திரப் பதிவு புகார் குறித்து விசாரிக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி), தென் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி) ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த லாவண்யா தாக்கல் செய்த மனுவில்
தானும்,தனது கணவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அருகே உணவகம், காய்கறி விற்பனை நிலையம் நடத்தி வருகிறோம். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் மதுரை கோ.புதூரைச் சேர்ந்த தர்மராஜாவிடம் ஒரு கோடி ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றோம். இதற்கு பணயமாக கடை அமைந்துள்ள 21 சென்ட் இடத்தை அவரிடம் அடமானமாக வழங்கி இருந்தோம். பெற்ற பணத்துக்கு மாதந்தோறும் 24 சதவீதம் வட்டியாக செலுத்தி வந்தோம். இந்த நிலையில், திடீரென வட்டியைக் கூட்டி இருப்பதாகக் கூறி, எங்களிடமிருந்து 36 சதவீத வட்டியை வசூலித்து வந்தார்.
தற்போது முழுத் தொகையும் செலுத்தி சொத்துப் பத்திரத்தை மீட்கத் தயாராக உள்ளதாக அவரிடம் கூறினோம். ரூ.5 கோடியே 80 லட்சம் வழங்கினால் மட்டுமே எங்களது பத்திரத்தை திரும்பத் தருவேன் எனக் கூறி கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும், போலியான ஆவணங்களைத் தயார் செய்து எனக்குச் சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இந்தச் சொத்தின் மதிப்பு தற்போது ரூ.12 கோடி. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்.மேலும், தர்மராஜாவுடன் இணைந்து எங்களை அந்த இடத்தைவிட்டு காலி செய்யுமாறு காவல்துறையினர் மிரட்டுகின்றனர். எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தர்மராஜ் சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்கிறார்.
எனது சொந்த இடத்தில் உணவகம், கடை நடத்துவதற்கு எந்த விதத்திலும் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என தர்மராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். மேலும்,எனது புகார் குறித்து விசாரணை நடத்தாத காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர, புகாரின் பேரில், தர்மராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் (ஆக.2) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் புகார் குறித்து தமிழக உள் துறைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி), தென் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி) ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய குறிப்பாணை அனுப்ப வேண்டும் என ஆணையிட்டார்…வழக்கு விசாரணையை மறு தேதி குறிப்பிடாமல் ஒட்திவைத்தார் நீதிபதி….