திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்கால கற்கள் கண்டுபிடிப்பு…
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாடோடி மனிதர்கள் மிருகங்களை வேட்டையாடி அவற்றை உணவிற்கு கிழிக்க பயன்படுத்திய 20 க்கு மேற்பட்ட பழங்கற்கால கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளது….!
திருப்பத்தூர்:ஜூலை:13, திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் உள்ள கத்தாரிமேடு என்ற இடத்தில் முத்தமிழ் வேந்தன் என்பவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலத்தில் வேர்கடலை பயிரிட்டுள்ளர்.
இந்த நிலத்தில் அவர் விவசாய பணிகளை மேற்கொள்ளும் போது பல வண்ணங்களில் வித்தியாசமான கற்களை கண்டுள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராக பணிபுரியும் முனைவர் பிரபு உள்ளிட்ட குழுவினர் உடனடியாக அந்த விவசாய நிலத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த இடத்தில் 20 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வண்ணங்களில் உள்ள கற்கள் பழங் கற்கால கருவிகள் என்பதை உறுதி படுத்தினர்.
இது குறித்து உதவி பேராசிரியர் முனைவர் பிரபு கூறியபோது:;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கத்தாரிமேடு என்ற பகுதியில் முத்தமிழ் வேந்தன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆய்வு செய்த போது பழங்கற்கால மற்றும் நுண்கற்கால கற்கருவிகள் கண்டறியப்பட்டது.
இந்தக் கற்கருவிகளானது வெவ்வேறு வண்ணங்களிலும்,வெவ்வேறு வடிவங்களில் கிடைத்துள்ளது.
அந்த காலத்தில் நாடோடிகளாக சுற்றித் திரிந்த மனிதன் உணவுப் பொருட்களை கிழிக்கவும், வெட்டவும் மற்றும் விலங்குகளை வேட்டையாடவும் இயற்கையாகக் கிடைக்கும் கற்களை உடைத்து அவற்றில் கூர்மையானவற்றை ஆயுதங்களாகவும் கருவிகளாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
மேலும் இப்பகுதியில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது…
இந்த பழங்கற்கால கருவிகள் கண்டறியப்பட்டுள்ளது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினார். ஆய்வின்போது கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் செ.ரஜினி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.