சென்னை மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போட்டு.. பல லட்சம் மோசடி செய்த வருவாய் துறை அதிகாரிகள்..!
சென்னை மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போட்டு பல லட்சம் மோசடி செய்த வருவாய் துறை அதிகாரிகள்..!
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கி கணக்கில் ரூ.11.50 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் பிரமோத் மற்றும் சுப்பிரமணி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.. பிரமோத், சுப்பிரமணி இருவரும் சேர்ந்து காசோலைகளில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுத்தி மோசடி செய்ததாக கைதாகி உள்ளார்கள்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாரிமுனை ,ராஜாஜி சாலையில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாவட்ட ஆட்சியராக ரஷ்மி சித்தார்த் ஜகடே பணியில் இருக்கிறார். பொதுவாக வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் யாரேனும் இறந்தால் அவர்களது குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு மாவட்ட ஆட்சியரின் என்.ஆர்.ஐ. வங்கி கணக்கு மூலம் உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6-வது மாடியில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் என்.ஆர்.ஐ. வங்கி கணக்கில் இருந்து ரூ.11.5 லட்சம் பணம் வேறொரு வங்கி கணக்கிற்கு மோசடியாக சென்றிருப்பது ஆய்வில் தெரியவந்தது. 3 காசோலைகளில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து போலியாக போட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப்பை பயன்படுத்தி இந்த மோசடி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வருவாய் துறை அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்களாக பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்த பாக்கம் புதிய காலனி பகுதியை சேர்ந்த பிரமோத் (வயது 30), திருப்பூர் மாவட்டம் கோட்டை மாலனூரைச் சேர்ந்த சுப்பிரமணி (31) ஆகியோர் தங்களது நண்பரான திருவள்ளூர் மாவட்டம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த டிரைவரான தினேஷ் (30) என்பவருடன் சேர்ந்து இந்த பணத்தை திருடியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.