Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி

கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை கட்டிமுடிக்கப்பட்டு 25 ஆண்டுகளை எட்டி இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு வெள்ளிவிழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளது….

200 அடி பாறை.. 9 வருட உழைப்பு..! வள்ளுவர் சிலை உருவானது எப்படி?

கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை கட்டிமுடிக்கப்பட்டு 25 ஆண்டுகளை எட்டி இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு வெள்ளிவிழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளது.

இன்றைக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் மிகப்பிரம்மாண்டமான சிலைகள் நிறுவப்படுகின்றன. பாஜக அரசு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்துள்ளது. ஆந்திர அரசு அம்பேத்கருக்குச் சிலை வடித்திருக்கிறது. கட்டுமான துறை இன்றைக்குப் பல மடங்கு வளர்ச்சியைக் கண்டுவிட்டது.கடல் நடுவே அல்ல கடலுக்கு உள்ளேயே ஒரு நகரத்தை உருவாக்கிவிட முடியும்.

ஆனால் 25 ஆண்டுகள் முன்னால் ஜேசிபி, பொக்லைன் எந்திரங்கள் போன்ற நவீன எந்திரங்களின் உதவியே இல்லாமல் 133 அடிக்குக் கன்னியாகுமரி கடல் நடுவே வள்ளுவருக்குச் சிலை வடிப்பது என்பது சாதாரணம் இல்லை. 1990 இல் தொடங்கிய இந்தச் சிலை அமைக்கும் பணி 1999 வரை நடைபெற்று 2000 ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. அன்றைய மதிப்பில் இதற்காக மொத்த பட்ஜெட் 6.14 கோடி. ஒரு நாளைக்கு 150 தொழிலாளர்கள் சேர்ந்து 16 மணிநேரம் இதன் கட்டுமான பணியை மேற்கொண்டார்கள்..?

அப்படி இரவு பகலாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்போது 25 வயது ஆகவே அதற்கான வெள்ளி விழாவை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.சிலைய சிற்பி கணபதி ஸ்தபதி தான் செய்தார்.அவருடன் சிலை வடிவமைப்பில் உதவிக்கரமாக இருந்த செல்வநாதன் பல நினைவுகளை அசை போட்டு பேசி இருக்கிறார். அவர், “கணபதி ஸ்தபதியுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழக்கம்.

ஸ்தபதி முதன்முதலில் மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கல்லூரிக்கு முதல்வராக இருந்தார். அப்போது சிலப்பதிகாரத்திற்கு உருவம் கொடுக்க கருணாநிதி முயற்சி எடுத்தார்.பூம்புகாரில் கோட்டம் அமைத்தார். அதைக் கணபதியை வைத்துத்தான் கட்டி எழுப்பினர். அதன்பிறகு 1970 களுக்குப் பின்னால் வள்ளுவர் கோட்டத்தை இதே சிற்பியின் துணையைக் கொண்டு உருவாக்கினார்.

அதன் தொடர்ச்சியாகத்தான் 1990இல் கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பாறை மீது வள்ளுவருக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு உருவானது.ஆனால், அவ்வளவு பெரிய கருங்கல் சிலையை அங்கே உருவாக்க முடியுமா? அதற்கான கற்களைக் கொண்டு போக வாய்ப்பு இருக்கிறதா? எத்தனை அடி உயரத்தில் செய்ய முடியும்? அந்தப் பாறை தாக்குமா? என பல சந்தேகங்கள் அவர் மனதிலிருந்தது. அதை பற்றி அறிந்து கொள்ளக் கணபதி ஸ்தபதியை அழைத்து அவர் பேசினார். நானும் அப்போது உடன் இருந்தேன்.

அந்தச் சந்திப்பு முடிந்த உடனேயே ஒருநாள் காலை 5 மணிக்கு ஸ்தபதி வீட்டுக்குக் கருணாநிதி போன் செய்தார். 133 அடி உயரத்தில் சிலையை அமைக்க விரும்புவதாகச் சொன்னார். அது முடியுமா? என்று கேட்டார். உடனே கணபதி ஸ்தபதி, நான் அதைச்செய்து முடிக்கிறேன் என்றார். அன்றே உடனடியாக அறிவிப்பை வெளியிட்டார்.

அந்தச் சிலை மட்டுமே 95 அடி உயரம். அதற்குக் கற்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரே அளவிலான கற்கள் இல்லை. பல வடிவங்களில் கற்கள் தேவை. சிலை அமைந்துள்ள பீடம் என்பது 13 அடுக்குகளாகக் கட்டினோம். சிலை 21 அடுக்குகளைக் கொண்டது. அதற்காக வரைபடத்தை கையால் வரைந்தார். அன்று கம்ப்யூட்டர் வசதியே இல்லை. ஜேசிபி, பொக்லைன் போன்ற நவீன உபகரண வசதிகள் அன்று கிடையாது. சாதாரண சவுக்கு மற்றும் பனை மரங்களை வைத்துத்தான் சாரம் கட்டினோம். வெறும் உளி, சுத்தியல் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்திச் செய்தது மிகப்பெரிய சவால்.

சிலை அமைந்துள்ள ஆதார பீடத்தைக் கன்னியாகுமரியிலேயே செய்தோம். சுற்றுச் சுவர் செய்வதற்காக அம்பாசமுத்திரம் பகுதியிலிருந்து கற்களை எடுத்து வந்தோம். வள்ளுவர் சிலையைச் சென்னையில்தான் செய்தோம். வாலாஜாபாத் பக்கம் சிறுதாமூரில் இருந்து கற்களை எடுத்து வந்தோம். இந்தக் கற்கள் ஒவ்வொன்றும் 3 முதல் 8 டன் எடை கொண்டவை.

இந்தக் கற்களை கன்னியாகுமரி பாறைக்குச் சின்ன படகுகள் மூலம் கொண்டு சென்றோம். செயின் புள்ளிங் மூலம் சிறுக சிறுக கற்களைக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தினோம். குமரி முனையிலிருந்த பாறையின் அளவு வெறும் 2400 சதுர அடிதான். மிகச் சிறிய இடம். அதில் 7 ஆயிரம் டன் எடை கொண்ட சிலையை நிறுவுவது என்பது மெகா சாதனை. மொத்தம் 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டினோம்.

இவ்வளவு எடையை அந்தப் பாறை தாங்குமா? என யோசித்துப் பார்த்தோம். அதற்காக துளையிட்டு அளந்தோம். பாறை கடல் ஆழத்தில் 200 அடி வரை இருந்ததைக் கண்டுபிடித்தோம். பின்னர் அனுமதி பெற்று பாறையைச் சமன்படுத்திக் கட்டினோம். வள்ளுவர் உடல் பகுதியை விடச் சவாலானது தலை பகுதிதான். தலை மட்டுமே 20அடி. கடல் சீற்றம், புயல் போன்ற காலங்களில் அடிக்கும் காற்றின் வேகத்தால் தலை தனியே விழ வாய்ப்பு உண்டு. புயல் காற்று அடித்தாலும் அதைத் தாங்கும்படி கணக்கிட்டு வலிமையாக அதை வடிவமைத்தார் கணபதி ஸ்தபதி. அதனால்தான் 2004 மிகப்பெரிய சுனாமி தாக்குதல் வந்த போது ராட்சச அலைகள் சிலையைத் தாக்கியது. அதைத் தாங்கி நின்றார் வள்ளுவர். சிலை எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை அன்றைக்கு உலகமே உணர்ந்தது. தற்போது 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பாறைக்கு இடையே கடல் நடுவில் கண்ணாடி இலைதான பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் முடிவுப்பெறும் நிலையில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் பாலத்தை திறந்து வைக்கிறார் இதற்கான முன்னேற்பாடு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன இருட்டு தினங்கள் நடைபெறும் இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு பட்டிமன்றங்கள் கலை நிகழ்ச்சிகள் உலகத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ளும் மாநாடுகள் நடைபெற இருக்கின்றன. டிசம்பர் 31 ஜனவரி 1 ஆகிய தினங்கள் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் நடைபெறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button