கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு “அய்யா வைகுண்டர்” பெயர் சூட்ட வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து..
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு “அய்யா வைகுண்டர்” பெயர் சூட்ட வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து..
பி.டி.செல்வகுமார் பேட்டி
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயர் சூட்ட வலியுறுத்தி கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 1 கோடி கையெழுத்து பெற்று அரசுக்கு சமர்பிக்கப்படும் என பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சாமிதோப்பு அன்பு வனத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் அய்யா வைகுண்டர் பாதயாத்திரையை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
ஆண்டு தோறும் நடைபெறும் பாதயாத்திரையை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:
அய்யா வைகுண்டசாமி தனது போதனைகள் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரகாசிக்க செய்தவர். அடிமைத்தனத்தில் இருந்து மக்களை முழுவதுமாக விடுவிக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். இதனால், கோடிக்கணக்கான மக்களால் கடவுளாக போற்றப்படுகிறார்.
சாதீய வன்கொடுமைகளில் இருந்தும், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்றும் விழிப்புணர்வை விதைத்துச் சென்றவர். எனவே, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயரை சூட்ட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அய்யாவின் பெயரை சூட்ட அரசு முன்வர வேண்டும். அவரைப்பற்றி நான் சொல்லித்தான் அரசுக்கு தெரியவேண்டும் என்பதில்லை.
இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெற்று அரசுக்கு சமர்ப்பித்திட கலப்பை மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, பேராசிரியர் தர்ம ரஜினி, காமராஜர் பேத்தி கமலிகா, கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் டி.பாலகிருஷ்ணன், கொட்டாரம் பேரூர் தலைவர் கணேசன், கொட்டாரம் இளைஞரணி தலைவர் சுபாஷ், செயலாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.